Vettri

Breaking News

அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் பிரதமரின் நத்தார் வாழ்த்துச் செய்தி!!




 நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரு தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது. ஒற்றுமையுடன் செயற்படுதல், பகிர்ந்து வாழுதல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் ஊடாக எமது உறவுகளும் வலுவானதாக முன்னேற்றமடையும்.

ஆரோக்கியமான மக்கள் சமூகம் மற்றும் பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணியானது வீட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை இதுபோன்ற கூட்டு முயற்சிகள் எமக்கு நினைவூட்டும்.

உள்நாட்டில் உட்பட வெளிநாட்டில் சேவையாற்றுபவர்களையும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டிகை காலத்தில் தமது அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிட முடியாத அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூற வேண்டும்.

உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாக சிறுவர்களும் மரணிக்கும் துர்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.

அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடுவதில் அவதானத்துடன் இருக்க வேண்டும். நமக்கு மாத்திரமன்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு சரியான தெரிவுகளை மேற்கொள்ளுங்கள். 

இந்த காலத்தில் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பவும், பொறுமையை வளர்த்துக்கொள்ளவும், ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments