Vettri

Breaking News

90 வருடங்களுக்கு முன் இந்தியாவில் தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் சுவாமி விபுலானந்த அடிகள்! ஒரு வரலாற்றுப் பதிவு!!




சுமார் 90 வருடங்களுக்கு முன் இந்தியாவில் தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார்.


ஆம், சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

அவ் வரலாறு படைத்த மாநாட்டை திருவாங்கூர் திவான் சேர் சி. பி. இராமசாமி ஐயர் தொடக்கி வைத்தார். 

சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன.

 சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டமை இங்கு விசேடமாக சுட்டிக் காட்டத்தக்க அம்சமாகும்.

 கொழும்பு கல்வித்துறையில் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய கீ. சி. இராமசாமி ஐயர் கணிதக் கலைச்சொல் நூற்குழுத் தலைவராக இருந்தார்.

இந்திய பேரறிஞர்களுக்கு மத்தியில் இலங்கையைச் சேர்ந்தவர் தலைமை தாங்கினார் என்பது சாமானியமான ஒன்றல்ல.

இலங்கையில் இருந்து இந்தியா சென்று அண்ணாமலை பல்கலைக்கழக உருவாக்கத்தில் பங்கேற்று அங்கே முதல் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய பெருமை அவர் பிறந்த காரைதீவுக்கு மாத்திரமல்ல முழு தமிழ் கூறும் நல் உலகிற்கும் பெருமை சேர்த்ததையும் நாம் மறக்க முடியாது.

88 வருடங்களுக்கு முன்னதாக இடம் பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வை,  குழு உறுப்பினர்கள் மற்றும் அன்றைய கறுப்பு வெள்ளை குழுப் படங்களை பதிவதில் பெருமையடைகிறேன் 


விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா,
ஆலோசகர் ,சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம்,காரைதீவு .

No comments