Vettri

Breaking News

காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!




( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவுக்கான குடிநீர்  விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (9) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது.


குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.எனினும்
ஆரம்பத்தில் சற்று பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. கடந்த 13 நாட்களின் பின்னர் முதற் தடவையாக மேலேயுள்ள தண்ணீர் தாங்கிகளிலும் நீர் ஏறியது.

அம்பாறை மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் யாவும் சனிக்கிழமை அன்று பூர்த்தியாகியிருந்தன.

கடந்த பதின்மூன்று நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் இரவு பகலாக திருத்தம் செய்யப்பட்டு வந்தது. அதிர்ஷ்ட வசமாக காலநிலையும் ஒத்துழைப்பு நல்கியது.

குறித்த குழாய்கள் எதிர்வரும் வெள்ள அனர்த்தத்தின்போது சேதமடையாமல் இருக்க உரிய தடுப்புஅணை  நடவடிக்கைகள் கடந்த இரு நாட்களாக எடுக்கப்பட்டன. கூடவே பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
 
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஹைதர்அலி, பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி விநியோகம் பராமரிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எந்திரி பா.மயூரன்  காரைதீவு பிரதேச காரியாலய  பொறுப்பதிகாரி  வி.
விஜயசாந்தன் சாய்ந்தமருது பொறுப்பதிகாரி பொறியியலாளர் கஜனி முருகேசு மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக கடமைக்கு அப்பால் சேவை அடிப்படையில்  பணிகளில் ஈடுபட்டனர்.

பக்கபலமாக அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தொடக்கம் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கினர்.

சம்பந்தப்பட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் மற்றும் இவ் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை வவுசர்களில் நீரை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்

No comments