13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குகொண்டு வரப்படும்!!
நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குகொண்டு வந்து, புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
சுமார் 37 வருடகாலமாக நடைமுறையிலுள்ள மாகாணசபை முறைமையால் நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை
மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே, சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ரில்வின் சில்வா, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை ஆரம்பகாலத்திலுருந்தே நாம் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில்கூட அனுமதி பெறாமலுமே அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இருப்பினும், அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.
மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகிறது.
எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகின்றது.
அதற்காக இலங்கையிலுள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்களை கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலமே ஆகும்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமையளித்து செயற்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.
நடைமுறையிலுள்ள பழைமை வாய்ந்த அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.
புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாணசபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது என அவர் தெரிவித்தார்.
No comments