Vettri

Breaking News

"தேசிய பட்டியலூடாக தான் பாராளுமன்றத்துக்கு செல்ல மாட்டேன்" - ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன்!!




 தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளதாகவும் தேசிய பட்டியலூடாக தான் பாராளுமன்றத்துக்கு செல்ல மாட்டேன் என மக்கள் மத்தியில் கூறியுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். எனினும், தேசியப் பட்டியல் விவகாரம் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே அமையும் எனவும் அந்த தீர்மானத்தை தாம் ஏற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (15) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில்,


இம்முறை நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன்.

மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல்படுத்த வேண்டும்.

தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவகளுக்குக்கூட மூன்றில் இரண்டு பெருபான்மை கிடைக்கவில்லை. கட்சித் தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர்.

ஆனால், இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 159 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதுவொரு உயர்தகு வெற்றியாகும் . அவர்கள் தேர்தல் அறிக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென தெட்டத் தெளிவாக கூறியுள்ளனர். குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி காலத்தில் வரைபை பூர்த்தியாக்குவோமென கூறியிருந்தனர்.

அந்த விடயங்களை அவர்கள் செய்வார்கனென எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதனை சரியாக செய்யும்போது எமது கட்சியின் பூரண ஒத்துழைப்பு அவர்களுக்கு இருக்கும்.

மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்தப்படவேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல்படுத்தவேண்டும்.

இந்த தேர்தலில் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம், திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ். தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனங்களை பெற்றுள்ளோம். ஆகவே, இது எமக்கு தோல்வி அல்ல. பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன். புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால், அதனை நான் நிச்சயம் செய்வேன் என தெரிவித்தார்.


No comments