Vettri

Breaking News

பாரிய நீர்க்குழாய் வெள்ளத்தில் அள்ளுண்டது! காரைதீவு நிந்தவூர் சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு குழாய் நீர் விநியோகம் தடை! மக்கள் அசௌகரியம்!!





( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட கரையோரத்தின் சில பகுதிகளில் குழாய் நீர் விநியோகம் கடந்த இரண்டு நாட்களாக (புதன்கிழமை வியாழக்கிழமை)
தடைபட்டுள்ளது.

 அம்பாறையில் இருந்து நிந்தவூர் பிரதான நீர்த்தாங்கிக்கு நீரை எடுத்து வருகின்ற பாரிய குழாய்  உடைந்திருப்பதன் காரணமாக இந்த நீர்த்தடை ஏற்பட்டு இருக்கின்றது .

450 மில்லி மீட்டர் விட்டம் உள்ள இப் பாரிய குழாய் பெரு வெள்ளத்தில் அள்ளுண்டதனால் இத்திடீர்த் தடை ஏற்பட்டு இருக்கின்றது

சம்மாந்துறை பிரதேசத்தின் 
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற பிரதேசத்தில் உள்ள பாரிய குழாயில் இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

 இதனால்  நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கான குழாய்நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டு உள்ளது. இன்றைய அனர்த்த வேளைகளில் மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் காரைதீவு பிரதேச காரியாலய  பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தனிடம்  கேட்ட பொழுது...

 குறித்த பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சமகால பெரு வெள்ளம் காரணமாக தொழிலாளர்கள் உரிய உபகரணங்களோடு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைமை  இருக்கிறது .

இப்பெரு வெள்ளம் காரணமாக ஐந்து இடங்களில் மரங்கள் வீழ்ந்து மற்றும் வெள்ளத்தில் அள்ளுண்டு எமது பாரிய குழாய் நீர் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கின்றது. இருந்தபோதிலும் நயினாகாடு என்ற இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் தொலைவிலிருக்கும் இந்த பாரியநீர்க்குழாய் மாத்திரம் உடைந்து துண்டாகி இருக்கிறது.

 நாளைய தினம் ஓரளவுக்கு அந்த பிரதேசத்துக்கு செல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் குழாய் நீர் விநியோகம் சீராகும்.

இதேவேளை காரைதீவு பிரதேசத்தில் உள்ள இடைத்தங்கல்முகாம்கள் மற்றும் குடியேற்ற திட்ட வீட்டு திட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கு வவுசர் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்றார்.

இதேவேளை 
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர்
ஐ.எல்.கைதர் அலி ஏற்கனவே இவ்வாறானதொரு அறிவித்தலை பொது மக்களுக்கு அறிவித்து இருந்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வழங்கல் சபையின் அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் போன்றன  வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதாலும் நீர் வழங்கல் குழாய்கள் செல்லும் பாதைகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் எந்த நேரத்திலும் நீர் வழங்கலில் தடங்கல் ஏற்படலாம்.

எனவே, இதனை கருத்திற் கொண்டு பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து பாவிக்குமாறும் ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின் அவை தொடர்பாக நீர்ப்பாவனையாளர்களுக்கு  அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments