Vettri

Breaking News

அனைவரையும் அரவணைத்து சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்துவேன்! ஏழு அம்ச கோரிக்கையின் அடிப்படையில் எதிர்கால செயற்பாடுகள் அமையும்!! கல்முனை வெற்றி விழாவில் கோடீஸ்வரன் உரை!!!







(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அனைவரையும் அரவணைத்து புதுப் பொலிவுடன் பரிணமிக்கும் சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்துவேன். மேலும் ஏழு அம்ச கோரிக்கையின் அடிப்படையில் எனது எதிர்கால செயற்பாடுகள் அமையும்.

 இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி  சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 கல்முனையில் அவருக்கு அளிக்கப்பட்ட வெற்றி விழா வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறினார் .

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம் நேற்று (17) காலை நடைபெற்றது.

பெருந்திரளான கல்முனை தமிழ் மக்கள் கூடிய அந்த நிகழ்வில், இரண்டாம் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவிருக்கின்ற ஏ.கே.கோடீஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்..

இம்முறை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழர்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாத்து இருக்கின்றீர்கள். எனது தமிழரசுக்  கட்சியையும் என்னையும் வெல்ல வைத்து இருக்கிறீர்கள். அந்த வகையில் முதற்கண் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அம்பாறை மாவட்டத்தில் புதுப்பொலிவுடன் ஒரு சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கின்றோம். அதற்கு அனைத்து தமிழ் மக்களையும் அனைத்து தமிழ்க் கிராமங்களையும் இணைத்து ஒன்று சேர்த்து இந்த கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம் .

அதன் படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் பிரதேசங்களுக்கு வந்து மக்களுடன் பேசி இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்ப்பதற்கான வழிவகைகளை திட்டமிட்டு கொண்டிருக்கின்றோம்.
 மக்களது வாழ்வியல் பொருளாதாரம் கல்வி கலாச்சாரம் என்பவற்றை மையப்படுத்தி இந்த சிறந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கின்றது .

நாங்கள் அமையப்போகும் மத்திய ஆளும் அரசாங்கத்துடன் பேசி சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் எதிர்காலத்தில் செய்ய இருக்கின்றோம்.

 உங்களுடன் இணைந்து தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.
 நான் ஏழு அம்ச கோரிக்கையை மையப்படுத்தி தேர்தல் கேட்டவன். அந்த ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எனது எதிர்கால செயற்றிடங்கள் அமைய இருக்கின்றன.
 எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பிரதேச சபைகள் புதிய வலயங்கள்  மற்றும் இயற்கை வளம் சுரண்டல் போன்ற 7 அம்ச கோரிக்கையை மையப்படுத்தி அது முன்னெடுத்து செல்லப் படும்.

 இனி அனைவரையும் அரவணைத்து  ஆலோசனை பெற்று எமது எதிர்காலத் திட்டங்கள் தொடரும். அதன்படியே எந்த முடிவும் எடுக்கப்படும் என்பதனை இங்கு உறுதியாக கூறி வைக்க விரும்புகின்றேன்.
மீண்டும் அனைவருக்கும் நன்றிகள். என்றார்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வி.குலசேகரம் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments