Vettri

Breaking News

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமைந்திருந்த அர்ச்சனா;எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே இன்று அமர்வு!!




 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதுடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ,குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை பாராளுமன்றத்தில் 175 எம்.பி.க்கள் புது முகங்களாகவே உள்ளனர்.


10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானதுடன் ஆளும் தரப்பில் அமைச்சர்கள் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் எதிர்க்கட்சியில் எதிர்கட்சித்தலைவர் வழமையாக அமரும் ஆசனத்தில் சபை கூடுவதற்கு முன்னரே யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம்.பி.யான இ. அர்ச்சுனா அமர்ந்திருந்தார்.

அது எதிர்கட்சித்தலைவருக்குரிய ஆசனம் என பாராளுமன்ற ஊழியர்களினால் அர்ச்சுனாவுக்கு எடுத்துக் கூறப்பட்டபோதும் அந்த ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்த அவர் இன்றைய தினம் எந்த ஆசனத்தில் எவரும் அமர முடியுமென கூறி அடம்பிடித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் சம்பிரதாயப்படி வேறு எம்.பி.க்கள் அமர்வதில்லை என அவர்கள் தெளிவுபடுத்தியபோதும் அர்ச்சுனா எம்.பி. அந்த ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார்.

அத்துடன் அர்ச்சுனா எம்.பி. இந்த நிகழ்வுகளை தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக நேரலை செய்ததுடன் சத்தியப்பிரமாண ஆவணங்களையும் படம் பிடித்துக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

அதனால் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே இன்று அமர்ந்திருந்தார்.

முற்பகல் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும் அர்ச்சுனா எம்.பி எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்திலேயே மீண்டும் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த படைக்கல சேவிதர் அது எதிர்கட்சித்தலைவரின் ஆசனம் என்று கூறியபோதும் அவர்களுடன் முரண்பட்டதுடன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி.யின் நடவடிக்கை ஏனைய எம்.பி.க்களுக்கும் தெரியவரவே அவர்கள் இவரின் நடவடிக்கையை கேலியாக நோக்கியவாறு சிரித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே அமர்ந்தார்.

அத்துடன் சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ச ,ரவி கருணாநாயக்க,ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

No comments