Vettri

Breaking News

பெருவெள்ளம் உடைத்த பாரிய நீர்க்குழாய் இருக்கும் இடத்திற்கு பொறியியலாளர்கள் விரைவு; திருத்த வேலைகள் ஆரம்பம்!!







( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால்  உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் இடத்திற்கு இன்று (29) வெள்ளிக்கிழமை பகல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , இயக்கமும் பராமரிப்பும் பிரிவிற்கான  பொறியியலாளர்  பாக்கியராஜா மயூரதன் மற்றும் 
காரைதீவு பிரதேச காரியாலய  பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர். இன்று காலநிலை ஓரளவு சீராக இருந்ததால் அங்கு செல்ல முடிந்தது.

உடனடியாக திருத்த வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையிட்டு அவர்கள் ஆராய்ந்தனர்.

முதற்கட்டமாக திருத்த வேலைக்கான உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான வாகனப் பாதை தற்போது செப்பனிடப்பட்டுவருகிறது.

பெரும்பாலும் நாளை (30) சனிக்கிழமை மாலை திருத்த வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அம்பாறையில் இருந்து நிந்தவூர் பிரதான நீர்த்தாங்கிக்கு நீரை எடுத்து வருகின்ற பாரிய குழாய்  உடைந்திருப்பதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கரையோரத்தில் குறிப்பாக  நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கான குழாய்நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது. மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

450 மில்லி மீட்டர் விட்டம் உள்ள சுமார் 20 மீற்றர் நீளமான இப் பாரிய குழாய் பெரு வெள்ளத்தில் அள்ளுண்டதனால் இத்திடீர்த் தடை ஏற்பட்டது தெரிந்ததே.

சம்மாந்துறை பிரதேசத்தின் 
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற பிரதேசத்தில் உள்ள பாரிய குழாயில் இவ் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

இன்று மழையில்லாத காரணத்தினால் அங்கு இத் திருத்த வேலைகள் இடம்பெற ஆரம்பித்தன

No comments