நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!!
நாட்டில் அதிகரித்து வரும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த கூறினார். விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ள இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம், முதற்கட்டமாக 70,000 மெற்றிக் தொன் நாட்டரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
விவசாய அமைச்சில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை பற்றிய கேள்வியும் உள்ளது. கடந்த காலங்களில் நாட்டரிசி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டு, தேவையான அளவு நாட்டரிசியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரிசி சந்தைக்கு வரவில்லை. எனவே, வெளிநாட்டிலிருந்து அரிசி கொண்டு வர வேண்டும்.
இந்த அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யலாமென எதிர்பார்க்கிறோம்.
இங்கு விவசாயி மற்றும் நுகர்வோர் பிரச்சினை ஏற்பட அனுமதிக்க மாட்டோம். நுகர்வோரை இடைத்தரகர்கள் சுரண்டுவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சந்தையில் அரிசி தட்டுப்பாடென்றால் அரிசி ஆலை உரிமையாளர்களிடமே அரிசி இருக்கவேண்டும்.
எனவே, விவசாயி மற்றும் நுகர்வேரைரைப் பாதுகாக்கும் நோக்குடன் அரசி இறக்குமதி செய்ய தீர்மானித்தோம்.
இதனால், பண்டிகை காலங்களில் தேவையான அளவு அரிசியை சந்தைக்கு வழங்க முடியும் .அரசு வெளியிடும் விலைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசி கிடைக்கும்.
இந்த அரிசி பிரச்சினைக்கு நம்மிடம் நிரந்தரமான பதில் இல்லை. தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையில், 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த போகத்தில் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம்’ என்றார் அமைச்சர்.
No comments