உழவு இயந்திர அனர்த்தம்: 5 நாட்களின் பின்னர் இன்று இறுதி 08 வது சடலமும் மீட்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவில் இடம்பெற்ற உழவு இயந்திர அனர்த்தத்தின் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இறுதி 08 வது சடலம் இன்று (30) சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதான வீதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் அறுவர் உள்ளிட்ட எண்மர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்தனர்
மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது கடந்த நான்கு நாட்களில் 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். சாரதி உள்ளிட்ட மற்றுமொருவரின் சடலமும் மீட்கப்பட்டன.
இன்று சனிக்கிழமை ஐந்தாவது நாள் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட போதிலும் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது.
அதன்போது இன்று சனிக்கிழமை காலை எட்டாவது சடலம் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய மைதானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கவலையுடன் புடைசூழ
மலையடிக்கிராம மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06சடலங்களும், வாகன சாரதியின் சடலமும், இன்னும் ஒரு இளைஞரின் சடலமுமாக மொத்தம் 08 சடலங்கள் மீட்கப்பட்டன.
கடற்படை மற்றும் பொலிசார் மற்றும் தவராசா லவன் தலைமையிலான காரைதீவு தமிழ் இளைஞர்கள் ,சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினர்
வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments