Vettri

Breaking News

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது!!




 பாறுக் ஷிஹான்


அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரசா அதிபர்  ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று(28)  கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர்  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை  நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி  மதரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும் மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிர்ப்பிழைத்த நிலையில் மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.


இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.


மீண்டும் நாளை காலை மீட்புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக மீட்பு குழு   தெரிவித்துள்ளது.


இதேவேளை நாளை கல்முனை அம்பாறை பிரதான வீதியில் நீர்மட்டம் குறைந்து இருந்தால் மாத்திரம் வழமை போன்று  அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி அளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.




No comments