இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று!!
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடைபெறுகின்றது.
பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 14ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. அதன்பின்னர், தபால் மூல வாக்களிப்புகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். நிறைவில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் நடைபெற்றது.இந்தக் காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.. இதற்கமைய 690 குழுக்கள் தேர்தல் களத்தில் போட்டியிட தகுதி பெற்றன. இந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்கள் இறுதி நேரம் வரையிலும் காத்திருக்காமல், நேரகாலத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கெனவே, அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments