Vettri

Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரிப்பு!!





செ.துஜியந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற மீள்குடியேற்றக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருகின்றனர். இதன் காரணமாக அம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி வசதி என பல்வேறு குறைபாடுகளுடன் எல்லைப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள மக்களின் வீடுகள், பயிர்செய்கைகளை துவம்சம் செய்து வருகின்றது. குறிப்பாக அதிகஸ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் சுற்று மதில்கள், வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றையும் சேதப்படுத்துகின்றது. இதனால் அப் பகுதி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரங்களில் போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்திற்குட்பட்ட மாலையர்கட்டு, 39 ஆம் கிராமம் ஆகியவற்றிலுள்ள பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானைகள் பாடசாலை வளாகத்தை துவம்சம் செய்திருந்தது.

மட்டக்களப்பின் போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வாகரை போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் அமைந்துள்ள கிராமங்களில் சமீபகாலமாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எல்லைப்புற மீள்குடியேற்றக்கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மின்சாரவேலி அமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments