அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவேண்டும் - முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சீனித்தம்பி செல்வராசா !!
செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் தந்தை செல்வாவின் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சி இன்று சுயநலவாதிகளின் கூடாரமாகிவிட்டது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி செல்வராசா தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இம்முறை தனது ஆதரவினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செல்வராசா
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி எனக்கூறிக்கொள்வோர் எல்லாம் தமக்குள் பிளவுபட்டு சுயநல அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். தந்தை செல்வாவினால் கட்டியெழுப்பப்பட்ட தமிழரசுக்கட்சி விதைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்கப்பட்டபோதிலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தன்னிச்சையான போக்கினால் அது சாத்தியப்படாது போய்விட்டது.
இந்நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். சங்கை பலப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களாகிய நாம் ஓரணியில் திரண்டு சங்கே முழங்கு சங்கே முழங்கு என்று ஆதரவு கொடுக்கவேண்டும். எனது பூரண ஆதரவினை சங்குக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சீனித்தம்பி செல்வராசா தெரிவித்தார்.
No comments