அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய எம்மவர்களே காரணம் - இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் !!
செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் சிந்தித்து வாக்களித்தால் இம் மாவட்டத்தில் இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் சமூக செயற்பாட்டாளர் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார்.
பாண்டிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது போன்று இம்முறையும் இங்குள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டங்கள் தீட்டப்படுகின்றது. எம்மத்தியில் இருக்கும் சில புல்லுருவிகள் கட்சியென்றும், சுயேட்சை என்றும் களம் இறங்கி மக்களை பசப்பு வார்த்தைகள் கூறி குழப்பிவருகின்றனர். இவ்வாறானவர்களின் சதிவலைக்குள் அம்பாறை தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது. மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும். தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் உரிமைக்குரல் எழுப்பிவரும் தன்மானமுள்ள கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமேயுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் இன்று அரசியல் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அபிவிருத்தி போன்ற துறைகளில் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக இருக்கின்றனர். பல கிராமங்கள் அதன் சுவடுகள் தெரியாமல் அழிந்துள்ளது. எமது தமிழ் கிராமங்களையும், மக்களையும் மீளக்கட்டியெழுப்பவேண்டும். பிரதேசத்தில் லஞ்சம் ஊழலற்ற பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யவேண்டும். இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் புதியவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இத் தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளனர். அவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே எமது தெரிவாக இருக்க வேண்டும். கடந்தகாலங்களில் கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு என்னாலான உதவிகளை வழங்கியுள்ளேன் . வழங்கியும் வருகின்றேன். இம்முறை தேர்தலில் வீட்டு சின்னத்திற்கும் எனது இரண்டாம் இலக்கத்திற்கும் புள்ளடியிட்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என வேட்பாளர் இந்துனேஷ் தெரிவித்தார்.
No comments