பொத்துவில் கோமாரி மற்றும் மல்வத்தை பிரதேசங்களில் தனியான பிரதேச செயலகம் - ஜெயசிறில்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை மறுக்கப்பட்டுவந்த பொத்துவில் கோமாரி மற்றும் மல்வத்தையில் பிரதேச செயலகங்களை நிச்சயமாக உருவாக்குவேன். மேலும் அம்பாறை மாவட்டத்தில் சகல தமிழ் பிரதேசங்களும் அபிவிருத்தி காணும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .
காரைதீவில் அமைந்துள்ள அம்பாறை ஊடக மையத்தில் இன்று (28) திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார் .
அவர் மேலும் கூறுகையில்..
அம்பாறை மாவட்ட தமிழர்களை பாதுகாக்கின்ற ஒரே கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி ஒன்றுதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இன்று எம் மீது பல கட்சிகளும் விமர்சனம் செய்கின்றார்கள். அதற்கு காரணமே அவர்கள் பயந்து விட்டார்கள் என்று அர்த்தம் .
இம்முறை யாருமே எதிர்பார்க்காத வகையிலே 60,000 வாக்குகளை பெற்று அம்பாறை மாவட்டத்திலே இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தை பெறுகின்றது என்பதனை இன்றே தெரிவிக்கின்றேன்.
கடந்த கால அரச பயங்கரவாதம் ஏனைய இனங்களின் அடக்குமுறை என்பதனை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஊழலற்ற அரசியலை நடாத்த வருகைதந்த தோழர் அனுரவிடம் பேசி எம்முடைய பிரச்சினைகள் யாவும் தீர்த்து வைக்கப்படும்.
29 கிராம சேவையாளர் பிரிவுகளையும் 39,000 மக்களையும் கொண்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நிச்சயம் கணக்காள நியமிக்கப்பட்டு அந்தஸ்து வழங்கப்படும். இதில் மாற்று கருத்துக்கள் இடமில்லை .
அது மாத்திரம் அல்ல பிரபலமான திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அவல நிலையை பார்த்திருப்பீர்கள். அங்கு அதனை பூரணமாக நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் இனிமேல் தான் ஒளி பெறும் என்பதனை ஆணித்தரமாக கூறுகின்றேன்..
No comments