தேர்தல் காலத்தில் பெரிய நீலாவணையில் ஒரு வேட்பாளர் றோட் போடுகிறார்! தேர்தல் கட்டளைச் சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா? கல்முனையில் சங்கு வேட்பாளர் புஷ்பராஜா கேள்வி!!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் இந்துனேஸ் பெரிய நீலாவணையில் கடந்த வாரம் வீதி அமைத்துள்ளார். தேர்தல் கட்டளைச் சட்டத்தின் படி இப்படி செய்யலாமா? இதற்கு தேர்தல் சட்டம் அனுமதிக்கிறதா?
இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராஜா கேள்வி எழுப்பினார் .
அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு இதனைச் சமர்ப்பிக்கிறேன்.நடவடிக்கை எடுப்பார்களா? என்று கேட்டார்.
கல்முனை உடையார் வீதியில் அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் அலுவலக திறப்பு விழா நேற்று (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றது.
முன்னதாக அவருடன் மற்றும் ஒரு வேட்பாளர் கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஈரோஸ் தலைவர் இரா.இராஜேந்திரா புளொட் மாவட்ட இணைப்பாளர் சங்கரி ஈபிஆர்எல்எவ் மாவட்ட இணைப்பாளர் புண்ணியநாதன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பட்டாசு வெடகளுக்கு மத்தியில் மாலை சூட்டி உடையார் வீதிச் சந்தியில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள் .
பின்பு
பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் சங்கமித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது .
அங்கு அவர் மேலும் பேசுகையில் ..
பொத்துவில் வீதியில் கல்குவாரி வைத்து ஏழை மக்களின் உழைப்பை சாறாகப் பிழிந்து கோடி கோடியாக கறுப்பு பணம் சேர்த்தவர் அவர்.
அங்குள்ள மக்கள் 20 வருடங்களில் சுவாசக் கோளாற்றால் பாதிக்கப்பட்டு 40 வருடத்தில் சாகக்கூடிய நிலைமையில் இருக்கின்றார்கள்.
இன்று தேர்தல் என்றவுடன் பெரிய நீலாவணையில் வந்து றோட்டு போடுகிறார் சில இடங்களில் சாராயம் கொடுக்கிறார் காசு கொடுக்கிறார். இது தேர்தல் சட்டத்தின் படி முடியுமா?
அந்த வீதிக்கு பொறுப்பான அரச திணைக்களங்கள் அல்லது உள்ளுராட்சி சபை அதற்கு அனுமதி கொடுத்ததா? என்று கேட்கிறேன்.
அதுமட்டுமின்றி கோடி கோடியாய் வைத்திருக்கும் கோடீஸ்வரன் இதே பாணியில் மக்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்.
அவர் நினைத்திருந்தால் ஐந்து ஏக்கர் காணியை எடுத்து சூரிய மின்கலத்தை பொருத்தி வரும் வருவாயில் ஏழைமக்களுக்கு உதவி இருக்கலாம் .
சுனாமி மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஒரு சோற்றுப் பார்சல் கூட ஏழைகளுக்கு கொடுக்காதவர்கள் இவர்கள் . இன்று தேர்தல் என்றஉடன் லஞ்சம் கொடுக்க வருகின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு கல்முனையில் போஸ்டர் ஒட்டி இருக்கிறீர்கள். இது அழகா?
பழம்பெரும் கட்சி தாய்க் கட்சி என்று ஒற்றுமையைச் சீர்குலைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்படிப்பட்ட கறுப்பு பண வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றீர்களே! வெட்கம் இல்லையா? இவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவத்தை இழக்க இருக்கின்றார்கள். கடந்த 65 வருட காலமாக இலங்கை தமிழரசுக் கட்சி கல்முனைமக்களுக்கு பாரிய துரோகத்தை இழைத்தது வந்ததை நாங்கள் மறந்து விட முடியாது .இன்னுமா அவர்களை நம்புவது?
ஊடகங்களே விழித்தெழுங்கள்.
அன்று நாங்கள் உயிரைத்துச்சம் என மதித்து தமிழ் மக்களுக்காக போராடினோம். கஷ்டப்பட்டோம் சிறையில் அடைபட்டோம் .
ஏன் வட்டமடுவில் 30 ஆயிரம் மாடுகளையும் நான்காயிரம் மேய்ச்சல் தரைக்காணியையும் மீட்டெடுத்தோம்.
அப்பொழுது இவர்கள் கள் எங்கு போனார்கள்? இன்று அந்த 269 குடும்பங்களும் என்னோடு கூட நன்றியோடு இருக்கிறார்கள் .நான் வேண்டாம் என்றாலும் லட்சம் தருகிறார்கள். கடவுளை நாங்கள் காணவில்லை கடவுள் வடிவில் உங்களைத்தான் கண்டு இருக்கின்றோம் என்று கூறுகின்றார்கள்.
உங்களால்தான் எங்களது வாழ்வாதாரம் கிடைத்தது . உங்கள் தேர்தல் காலத்தில் எங்களது உதவியைச் செய்வோம் என்கிறார்கள். இவ்வாறுதான் மக்கள் நன்றியுடன்இருக்க வேண்டும்.
மக்களின் உழைப்பை உறிஞ்சி சேர்த்த கோடிகளை இன்று ஓடோடி வந்து வீதி போடுகிறார்கள். ஏன் இந்த வீதியை கடந்த காலத்தில் போட்டிருக்கலாமே?
தமிழரசு கட்சி இப்படிப்பட்டவர்களை அனுமதிக்கிறதா?
எனவே தான் சொல்கிறோம் மாற்றம் மாற்றம் என்று பேசித் திரிவதால் மாற்றம் வராது. மாற்றும் ஒன்று தேவை என்றால் முதலில் நாங்கள் மாற வேண்டும். அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவும் அதைத்தான் சொல்லுகிறார் .
எனவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிம்மதியாக அபிவிருத்தியோடு வாழ வேண்டுமாக இருந்தால் நீங்கள் சங்கை ஆதரியுங்கள். கடந்த காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியை ஆதரித்து நீங்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் அல்ல.
எந்த அபிவிருத்தியும் நீங்கள் காணவில்லை. உரிமையையும் பெறவில்லை . மாறாக பசிபட்டினி பஞ்சம் அடக்குமுறை தான் மிச்சம்.
எனவே இம்முறை சங்கை ஆதரியுங்கள் பாரிய மாற்றம் ஏற்படும் .என்னை விரும்பினால் பத்துக்கு வாக்களியுங்கள் .இல்லாவிட்டால் வேறு இலக்கங்களுக்கு வாக்களியுங்கள் .நன்றி.
No comments