Vettri

Breaking News

அமைச்சரவை முடிவுகள் வெளியீடு!!





01. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணித்துண்டை உத்தேச ஏக்கல உப மின் நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்

ஏக்கல மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் காணப்படும் அதிக மின்சாரக் கேள்விக்கமைய, தொடர்ச்சியான மின்வழங்கலைப் போன்று, தற்போது நிலவுகின்ற மின்கட்டமைப்பின் தரப்பண்பான நிலைமையை அதிகரிக்கும் நோக்கில், ஏக்கல கைத்தொழில் பேட்டையில் உப மின் நிலையத்தை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏக்கல சென்ட்குறோப் தோட்டத்திற்கு அண்டியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியில், 02 ஏக்கர் 02 றூட் காணித்துண்டைப் பயன்படுத்தி குறித்த உப மின் நிலையத்தை அமைப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பிரதம மதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டுப் பெறுமதியான 320 மில்லியன் ரூபாவை அறவிட்டு, குறித்த காணித்துண்டை இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தேசிய சுவடிகள் கூடத்திற்கு ஆவணக்காப்பகங்களின் சர்வதேச பேரவையால் வழங்கப்படும் நன்கொடை

ஆவணக்காப்புத் தொடர்பான மேனிலைத்தரவு (Metadata) மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கான Atom (Access to memory மற்றும் Archivematica போன்ற திறந்த மூலாதார மென்பொருள் தொடர்பான நிபுணர்களை இணைத்துக் கொண்டு ‘இலங்கை தேசிய சுவடிகள் கூடத்தில் Atom (Access to memory போன்ற மென்பொருள் தளத்தை உருவாக்குவதற்காக 7,000 யூரோக்கள் நன்கொடையை வழங்குவதற்கு ஆவணக் காப்பகங்களின் சர்வதேச பேரவையின் சர்வதேச ஆவணக்காப்பு அபிவிருத்திக்கான நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

தேசிய சுவடிகள்கூடத்தின் நம்பகமான டிஜிட்டல் களஞ்சியத்தை அமைப்பதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கட்டம் – 01 இற்கான செலவின் ஒருபகுதியைப் பொறுப்பேற்பதற்காக குறித்த நன்கொடையைப் பயன்படுத்துவதற்காக ஆவணக்காப்பகங்களின் சர்வதேசப் பேரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்திட்ட சமவாயத்தை ஆவணக்காப்பகங்களின் சர்வதேச பேரவையுடன் கையொப்பமிடுவதற்கும் மற்றும் அதற்குரிய ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருத்துவ வழங்கல்களுக்கான பெறுகை

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தப் (Buy Back Agreement) பொறிமுறையின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2013.11.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், அடையாளங் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்காக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ விநியோகத்தை மேற்கொள்வதற்காக பின்னரான கொள்வனவு செய்தல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சரான பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 2024/25 ஆண்டில் சுகாதார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மருத்துவமனைகள்/ நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவை வழங்கலுக்கான பெறுகை

சுகாதார அமைச்சின் கீழ் காணப்படுகின்ற மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்குவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி கோரல் முறைமையைப் பின்பற்றி, வரையறுக்கப்பட்ட றக்னா லங்கா பாதுகாப்புக் கம்பனி, வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.தனியார் கம்பனி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும், மத்திய மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற மனிதவன அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்த மாகாணங்களில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் கீழ் காணப்படும் மருத்துவமனைகள், நிறுவனங்களுக்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரை மற்றும் கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, குறித்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் 2024.10.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாத காலத்திற்கு வரையறுக்கப்பட்ட எல்.ஆர்.டீ.சீ.சேவைகள் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏக்கல ஒலிபரப்புக் கூடம் அமைந்துள்ள காணியை ஒப்படைப்பதால் பெற்றுக்கொள்ளப்படும் பணத்தைப் பயன்படுத்தி கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனை அதிகரித்தல்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏக்கல ஒலிபரப்புக் கூடம் அமைந்துள்ள காணியை 1,286 மில்லியன் ரூபாய்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சுயாதீன நிதி ஈட்டல் நிறுவனமாக மீள்கட்டமைப்பதற்காக குறித்த பணத்தொகையைப் பயன்படுத்தப்பட வேண்டுமென 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 525 மில்லியன் ரூபாய்கள் தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதில் 205 மில்லியன் ரூபாய்கள் கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சுயமான ஓய்வு முறைக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 145.72 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நவீனமயமாக்கல் தொடர்பான 25 செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. விசேட அதிரடிப்படையின் கலபலுவாவ நிர்மாணிக்கப்படுகின்ற திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லக் கட்டடத்தொகுதிக் கருத்திட்டத்தின் எஞ்சியுள்ள வேலைகளைப் பூர்த்தி செய்தல்

விசேட அதிரடிப்படையின் கடமைகளில் ஈடுபடுகின்ற உபபொலிஸ் அத்தியட்சகர்களுக்கான 15 திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் திருமணமாகியவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் 21 ஆக மொத்தமாக 36 வீட்டு அலகுகளை கலபலுவாவ பிரதேசத்தில் அமைப்பதற்காக 2016.08.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கருத்திட்டக் காலப்பகுதியை 2024.12.31 வரைக்கும் நீடிப்பதற்கும், மூலப்பொருட்களின் விலை அதிகளவில் அதிகரித்திருத்தல் மற்றும் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கருத்திட்ட செலவை 460.58 மில்லியன் ரூபாய்களாகத் திருத்தம் செய்வதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரசாங்க பகுப்பாய்வாளர் பதவிக்கு நியமித்தல்.

அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய திருமதி. தீபிகா செனவிரத்ன 2024.10.11 திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விஷேட தர அலுவலர்களிலிருந்து சேவைமூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக ஆகக்கூடிய சேவைமூப்புள்ள, தற்போது அரசாங்க மேலதிக பகுப்பாய்வாளர் பதவியில் சேவையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விஷேட தர அலுவலர் திருமதி. பத்திரஹே சந்யா குமுதினி ராஜபக்ஸவை நியமிப்பதற்காக நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

08. ஹம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்து, ஹம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியில் தற்போது கடமையாற்றும் திரு. எச்.பி. சுமணசேகர அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நீதி, பொது நிரவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சுக்கு இணைப்பு செய்வதற்கும், குறித்த பதவிக்காக தற்போது தென் மாகாண சபையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாசார விவகார, சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் மனைப் பொருளாதார, வீடமைப்பு நிர்மாண, வீடமைப்பு மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சின் செயலாளராக சேவையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தர அலுவலர் ஏ.பி.ஐ. த சில்வாவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.

09. இலங்கையின் அரச கடன்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் கட்டமைப்பைக் கொள்வனவு செய்தல்

2024 அண்டின் 33 இலக்க கடன் முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் நிறுவப்பட வேண்டும். மேற்குறித்த சட்டத்தின் 23 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய அரச கடன்கள் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட, விபரமான மற்றும் சரியான தரவுகள் மற்றும் தகவல்கள் பொருத்தமான தரவுக் கட்டமைப்பில் பேணப்பட வேண்டும். குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவையால் நியமிக்கப்படும் பெறுகை குழுவின் விதந்துரை பெறுவதற்கும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

No comments