கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் "நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடும் நிதிக்கு என்ன நடந்தது?
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கொன்றினை இலங்கை நீதிக்கான மய்யம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) தாக்கல் செய்துள்ளதாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபை பகுதியில் புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று தோண்டப்படுகின்ற கொங்கிரீட் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாததால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றமையை எமது மய்யம் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.
இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினரால் பொறுப்புணர்ச்சி யற்ற கண்துடைப்பான பதில் எமக்கு வழங்கப்பட்டது. இதனை எமது மய்யம் ஏற்றுக்கொள்ளாததால் இன்று மாநகர சபைக்கு எதிராக இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வழக்கிற்கு மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றின்சான் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடுவதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குள் நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட வீதிகள் மாநகர சபையினால் செப்பனிடப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகின்றது.
இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்பு களாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட சேவையினை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடியாகும். மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிக்கான மய்யம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தோண்டப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணியை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அன்றே தெரிவித்திருந்தோம்.
அரசு நிறுவனம் ஒன்றுக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதானது இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்
No comments