அம்பாறை தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க ஓரணியில் திரண்டுள்ளனர் - வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ்
செ.துஜியந்தன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இழந்த பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்க இம்முறை இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க ஓரணியில் திரண்டுள்ளனர். இவ்வாறு அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார்.
கல்முனை மணல்சேனை கிராமத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் அலுவலகத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாடியபோது இதனை தெரிவித்தார். வேட்பாளர் இந்துனேஷ் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலின் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இழந்த பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் சுயநல அரசியலுக்காக விலைபோகும் அரசியல் வியாபாரிகளினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இங்குள்ள புல்லுருவிகள் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக வாக்கு சேகரிக்கும் இடமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை பயன்படுத்துகின்றனர். இதேபோல் பல சுயேட்சை குழுக்கள் சிலரின் பாராளுமன்ற கனவை நிறைவேற்ற பணம் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இழந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை இம்முறை வென்றெடுக்க வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க ஒன்றுபட்டுள்ளமை எமது வெற்றியாகும். தேர்தலில் வெற்றிபெற்றதும் அம்பாறை தமிழ் மக்களின் அரசியல் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேசி தீர்வினை பெற்றுத்தருவேன் என வேட்பாளர் இந்துனேஷ் தெரிவித்தார்.
No comments