Vettri

Breaking News

குடிநீர் வீண்விரயம் - சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




 மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இருப்புக்கு நீர் இன்றியமையாததாகும். குறிப்பாக மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் மிகவும் அவசியமானது. பொதுவாக பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும் இடையில் பரஸ்பர சம்பந்தம் உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.





இந்த வகையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உடங்கா என்னும்பகுதியில்  அம்பாறை -கல்முனை பிரதான வீதியின் ஒரு மருங்கில் 24 மணித்தியாலமாகவும் சுமார் 2 மாதத்திற்கு மேலாகவும் குடிநீர் வீணடிக்கப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த காலங்களில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பின் பின்னர் சேதமாக்கப்பட்டதாக கூறப்படும்  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான குடிநீர் குழாய் திருத்தப்பட்ட பின்னர் இவ்வாறு மேலதிக நீரை தினமும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தினமும் வீணாக வெளியேற்றப்பம் நீர்  அருகில் உள்ள வடிகான் ஊடாக அருகில் உள்ள குளத்தினை நோக்கி சுமார் 2 கிலோமீற்றர் வீணாக வெளியேற்றப்பட்டு  கலக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் சம்மாந்துறை பகுதியில் இன்னும் பல குடும்பங்கள் குடிநீர் இணைப்பின்றி  அல்லல்பட்டு வரும் நிலையில் இவ்வாறு வீணாக நீர் வெளியேற்றப்படுகின்றமை  தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நாட்டில் நிலவும் கடும் உஷ்ணத்தின் விளைவாக தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது.இதனை அடுத்து அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்காக நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் அடிக்கடி  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை  தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள  நிலையில் இவ்வாறு வீணாக குடிநீர் வெளியேறி செல்வதை ஏன் அசமந்தமாக பார்த்துக்கொண்டு நிற்கின்றது என்பது தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இல்லாவிடின் இவ்வாறு நீர் வீணாக வெளியேறி சென்றால் எதிர்காலத்தில்   நீர் குறைவடைவதுடன்  நீருக்கான தட்டுப்பாடும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

 சில பிரதேசங்களின் குழாய்நீர் விநியோகத்தில் கசிவு சாதாரணமானதாகக் காணப்பட்டாலும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வீண் விரயம் பாராதூரமானது.குடிநீர் விநியோகக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வெடிப்புக்கள் ஏற்படுவது வழமையாகும். சில பிரதேசங்களில் அவ்வாறான வெடிப்புக்கள் ஏற்பட்டு மணித்தியாலக் கணக்கில் நாட்கணக்கில் குடிநீர் வீண்விரயமானாலும் அது தொடர்பில் பின்னர்  கவனம் செலுத்தப்பட்டு  நிலைமை சீர் செய்யப்படும்.

ஆனால் இவ்விடத்தில் அவ்வாறில்லை.இவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

No comments