Vettri

Breaking News

அரவிந்தகுமாரின் இல்லத்தை பொறுப்பேற்ற தோட்ட நிர்வாகம்




 கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார், தான் வைத்திருந்த ஹட்டன் தோட்டக் கம்பனிக்கு சொந்தமான லிந்துலை ஹென்ஃபோல்ட் தோட்டத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (05) நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

மேற்படி இல்லம், 1987 ஆம் ஆண்டு அரவிந்த குமார் குறித்த தோட்டத்தின் பிரதான எழுதுவினைஞராக பணிபுரிந்த போது, ​​தோட்ட நிர்வாகத்தினால் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்தது.

அவர் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னரும் அவ்வீட்டை தோட்ட நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்காமல், அந்த வீட்டைப் புனரமைத்துக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தாக தெரிவித்து தோட்ட நிர்வாக அதிகாரியினால் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், நீண்ட காலமாக நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் நிலுவையில் இருந்துவந்த குறித்த வழக்கின் தீர்ப்பில், அரவிந்தகுமார் அந்த இல்லத்தை மீள ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது.  பின்னர் மேற்படி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த போதிலும் உயர்நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியது.


பின்னர், அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தியோகபூர்வ இல்லத்தை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு அரவிந்தகுமாருக்கு உத்தரவிட்டது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில், லிந்துலை பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லத்திற்கு சென்று அரவிந்த குமாருக்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் பட்டியலிட்டதோடு அதன் நகல் ஒன்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீடு மற்றும் உடைமைகள் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரவிந்த குமார் அரசியலில் பிரவேசித்த காரணத்தினால், அவர் ​​அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் நீண்ட காலம் தங்கியிருந்ததாக ஹென்ஃபோல்ட் தோட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

நீதிமன்றத்தினால் தோட்ட நிர்வாக அதிகாரியிடம் கையளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தோட்டத்தில் பணிபுரியும் மற்றுமொரு அதிகாரிக்கு உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments