Vettri

Breaking News

விறுவிறுப்பாக நடைபெற்ற 22 வது தெல்லிப்பளை மகாஜனா - யாழ் ஸ்கந்தா துடுப்பாட்ட வீரர்களின் போர் வெற்றி தோல்வியின்றி நிறைவு!!





(அஸ்ஹர் இப்றாஹிம்)

வீரர்களின் போர் என வருணிக்கப்படும்  தெல்லிப்பளை மகாஜனா மற்றும் யாழ்ப்பாணம்  ஸ்கந்தவரோதயா கல்லூரிகள் மோதிய  மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக, பார்வையாளருக்கு பெரும் விருந்தாக அமைந்து சமநிலையில் நிறைவுபெற்றது. 

இரண்டாவது இனிங்சில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மகாஜனா, 6 விக்கட்டுக்களை  இழந்து 169 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டநேரம் நிறைவுபெற  வெற்றி - தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது 22 ஆவது வீரர்களின் போர் போட்டி.
       
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தெல்லிப்பளை  மகாஜனா அணித்தலைவர் களத்தடுப்பை தேர்வுசெய்ய ஸ்கந்தா முதலில் துடுப்பெடுத்தாடியது. முதலாவது இனிங்சில் ஸ்கந்தா அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மகாஜனா அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களைப்பெற்றது. 

34 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா 9 விக்கட்டுக்களை  இழந்து 150 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை நிறுத்தி, இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாட மகாஜனாவை அழைத்தது. மகாஜனாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்து, போட்டியை விறுவிறுப்பாக்கினார்கள். எனினும் அவர்களது ஆட்டமிழப்புக்களைத் தொடர்ந்து போட்டி சீரான வேகத்தில் நகர்ந்து, பின்னர் மகாஜனா வெற்றியை நோக்கி துடுப்பாட்டத்தை வேகமாக்கியது. எனினும் விக்கெட்டுக்களும் சீரான வேகத்தில் வீழ்த்தப்படவும் ஆட்டநேரம் நிறைவுபெறவும் பார்வையாளருக்கு நல்ல விருந்தோடு போட்டி வெற்றி - தோல்வி இன்றி சமநிலையானது.
          
 

No comments