வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் !!
சிறிலங்கா (Sri lanka) அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) சமூகத்தினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (30) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளினை முன்னிட்டு வாயில் கருப்புத் துணிகளை அணிந்தவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2009 இறுதி ஈழப் போருக்கு முன்னர் இருந்து தொடங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களிற்கு, இத்தனை ஆண்டுகளாகியும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் எங்கள் தாய்மாருக்கும், உறவுகளுக்கும் உரிய நீதி எதையும் வழங்கிடாது.
தொடர்ந்து காலதாமதங்களாலும், பொய் வாக்குறுதிகளால் வஞ்சித்து எங்கள் கூட்டு மனவலுவினை வீழ்த்தி எம்மை உதிரிகளாக்க முயலும் பன்னாட்டு சமூகங்களுக்கும் சிங்கள – பௌத்த பேரினவாத ஒடுக்குமுறை சிறிலங்கா அரச கட்டமைப்பிற்கும் தமிழ் மக்களின் கூட்டு ஒருமைப்பாட்டினையும் எத்தனை ஆண்டுகளானாலும் எங்கள் தலைமுறைகளின் குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
என்பதை உணர்த்துவதற்கும் இக் கவனயீர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கம் என்பவற்றின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கவனயீர்ப்பில் மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments