Vettri

Breaking News

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நாளை மட்டக்களப்புக்கு விஜயம்!






( வி.ரி.சகாதேவராஜா)

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் 
சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ்  
நாளை  21ம் திகதி புதன்கிழமை முதல் 27ம் திகதி வரை மட்டக்களப்பிற்கு வருகை தரவிருக்கிறார்.

அவர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்து கொழும்பு மலையகம் சென்று மிசன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

ஸ்ரீமத் சுவாமி 
விமூர்தானந்தஜி   தற்கால 
இளைஞர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் மற்றும் அனைவருக்குமான 
எழுச்சிமிகு சொற்பொழிவுகளை வழங்கி அவர்களின் சுயமுன்னேற்றத்துக்கான 
சிந்தனைகளைத் தூண்டக்கூடியவர். 


இவர் மட்டக்களப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ள காலப் பகுதியில் கல்லடி, 
திருச்செந்தூர் கொக்கட்டிச்சோலை, மண்டூர் மற்றும் காரைதீவு போன்ற பல 
இடங்களில் தனது எழுச்சிமிகு சொற்பொழிவுகளை ஆற்றவுள்ளார் 
 
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்தில் சிறப்பு சொற்பொழிவு 
ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ்ஜினால்  23.08.2024 
வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7.00 மணி வரை ராமகிருஷ்ண 
மிஷனில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கோவிலில் பக்தர்களுக்கான சிறப்பு 
ஆன்மீக சொற்பொழிவு இடம்பெறும் என மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.

வைரவிழாவில்...

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் அறநெறிப்பாடசாலை வைரவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

1963ஆம் ஆண்டு விஜயதசமி தினத்திலன்று ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு 
ராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையானது 2023ஆம் ஆண்டுடன் தனது 60
வருடங்களைப் பூர்த்திசெய்துள்ளது.

 இந்நிகழ்வை முன்னிட்டு அறநெறிப் பாடசாலையின் 
வைரவிழா நிகழ்வுகள் எதிர்வரும் 24.08.2024 சனிக்கிழமையன்று காலை 9.30 மணி 
தொடக்கம் 12.30 மணி வரை சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 
சிறப்பாக நடைபெறவுள்ளன.

 இந்நிகழ்விலும் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ் 
 பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளார்.

விவேகானந்த பூங்கா திறப்பு விழாவில்..

அதேவேளை புதுக்குடியிருப்பில் அழகாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்த பூங்கா திறப்பு விழாவிலும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ் விழா 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்தாபக தலைவர் க. சற்குணேஸ்வரன் தலைமையில், இலங்கைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர்  ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

No comments