Vettri

Breaking News

அரச நிர்வாகத்தில் ரணில் கொண்டுவரும் மாற்றம்!




 ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் கொள்கைப் பிரகடனங்களில் இளைஞர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தில் 50இற்கும் குறைவான வார்த்தைகளே இளைஞர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் பொறுப்பில் உள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய தலைமுறைக்கு நவீன தொழில்நுட்ப உலகில் முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான டிஜிட்டல் அறிவையும் அனுபவத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் விநியோகம், டிஜிட்டல் வணிக செயற்பாடுகள் என்பன தொடர்பில் பயிற்சி வழங்கி வருமான வழிகளை திறந்து விடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய தலைமுறையிடையே (Gen Z Dialogue) கருத்தாடலை  உருவாக்குவதன் மூலம் புதிய தலைமுறையினரின் கருத்துக்கள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்படும் எனவும் அதற்காக தேசிய மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச  மட்டத்தில் இளைஞர் மத்தியநிலையங்களை அமைக்கும் பொறுப்பு தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

இந்த மாநாட்டில் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளம் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அரசியல் களத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகத்தை நிறுவி புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை மேம்படுத்துவதற்கு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

Gen Z தலைமுறையை இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்க தாம் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்த  இளைஞர்களின் நம்பிக்கைகள் மீண்டும் "இயலும் ஶ்ரீலங்கா" திட்டத்தின் ஊடாக நிறைவேற்றுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''நாட்டை எதிர்காலத்தில் இளைஞர்களே பொறுப்பேற்கவுள்ளனர். Gen Z தலைமுறையினர் இலங்கை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து காணப்படுகிறது.

75 வருடங்களாக இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து தான் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார்கள். இந்த இளைஞர் சேவை மன்றம் 1948 இல் இருக்கவில்லை. இளைஞர் கழகங்களை உருவாக்கி இளைஞர் சேவை மன்றத்தை உருவாக்கியது நான்தான். எனவே, நாடு முன்னேற்றப்படவில்லை என்று கூறுவது ஏற்கக் கூடிய பதில் அல்ல.

ஆனால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்துவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 2020 தேர்தலில் நாம் மொட்டுக் கட்சிக்கு  இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என மற்றுமொரு தரப்பு கூறுகின்றது. அதனால்தான் எங்களுக்கு அரசியல் வேண்டாம் என இளைஞர்கள் கூறுகின்றனர்.

அந்த சந்தர்ப்பங்களில் தாம் ஆட்சியில் இருக்கவில்லை என எனது ஜே.வி.பி.  நண்பரான முன்னாள் அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார். சஜித் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ  ஆகியோரும்  நானும் முன்னாள் அமைச்சர்கள் என்பதை நினைவு கூருகின்றேன்.

2020  பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாகவும், 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேடிக்கொள்ளாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டேன். இதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி  தோல்வியடைந்தது.  உண்மையைச் சொன்னதால் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் நான் அரசியலை விட்டு விலகவில்லை. நாட்டை மீட்க வேண்டும் என்பதால் நாட்டைப் பொறுப்பேற்றேன். உங்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதற்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன். எனவே நாம் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதையை மாற்றினால் பாதிப்பு தான் ஏற்படும். உங்கள் எதிர்காலமே இதன் ஊடாக தீர்மானிக்கப்படும்.

2048 பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால்  தாய்லாந்தும் வியட்நாமும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயற்பட்டதாலே அவை  வர்த்தகப் பொருளாதாரமாக மாறின. 

ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவோமா அல்லது இந்த நிலையில் இருந்து கடன் வாங்கி இன்னும் 15 ஆண்டுகளில் வீழ்ச்சி அடையப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இன்னும் 15 வருடங்களில் எரிவாயு, மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்காக பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். அதனை அமுல்படுத்தவே இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆணையை கோருகிறேன்.

மேலும், புதிய தலைமுறையினருடன் ஒரு கருத்தாடலை (Gen Z Dialogue) ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இது தேசிய, மாகாண, மாவட்ட, மற்றும் பிரதேச மட்டங்களிலும் செய்யப்பட வேண்டும். அதற்காக இளைஞர் மையங்கள் ஸ்தாபிக்கப்படும். அந்தக் கருத்தாடலை  ஏற்பாடு செய்யும் பொறுப்பு, இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், இளைஞர்கள் மீண்டும் அரசியல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

மேலும், இளைஞர் வசந்தத்திற்கு மேலதிகமாக ஏனைய துறைகளில் உள்ள இளைஞர்கள் பற்றியும் எமது கொள்கைப் பிகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 04 வருடங்களாக தொழில் வாய்ப்புகளை வழங்க முடியவில்லை. எனவே, அடுத்த ஆண்டு இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் புதிய வருமான மூலங்களை உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம். விவசாயத் துறையில் நிரந்தரமாக சுயதொழில் செய்பவர்களுக்கு உதவி வழங்க சிறப்புப் பிரிவு ஸ்தாபிக்கப்படும்.

மேலும், தற்போது தொழில் பயிற்சி பெறும் நபர்களுக்கு மேலதிகமாக மேலும் 50,000 இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற நிதி வழங்கப்படும். எனவே 150,000 பேருக்கு  2025 இல் தொழில் வாய்ப்புகளை வழங்குவோம். இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தொழிலுக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் ஆதரவை வழங்குவோம். பொருளாதார வளர்ச்சியுறும்போது புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

முன்னாள் அமைச்சர்  அனுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தையும் படித்தேன். அதில் தொழில் வாய்ப்புகள் குறித்து சரியாக குறிப்பிடப்படவில்லை. இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பு உருவாக்குவது, தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள் தகவல் அறிய வங்கி உருவாக்கப்படுதல், அரச தொழிலுக்கான போட்டிப் பரீட்சை முறையை அறிமுகம் செய்தல், உயர் தரம் சித்தி பெற்றவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கு, எப்படி பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் தொழில் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுதான் வித்தியாசம்.

இளைஞர்களுக்கு கடன் வழங்க அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளைகளில் இளைஞர்கள் சந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு கிளைகள் இல்லை. அவை இளைஞர் சங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தெரியாமல் கொள்கைகளை எழுதினால் இப்படித்தான் இருக்கும்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தையும் வாசித்தேன். அதில் இளைஞர்களைப் பற்றி 49 வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இளைஞர்களைப் பற்றி 50 வார்த்தைகள் கூட அவர்கள் எழுதவில்லை. இந்த நபர்களிடம் எதிர்காலத்தை நீங்கள் ஒப்படைத்தால், இங்குள்ள Gen Z தலைமுறை அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டும்.'' என்றார்.



 

No comments