கவனிப்பாரற்றுக் கிடக்கும் அண்ணா சனசமூக நிலையம்; சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
(வி.ரி. சகாதேவராஜா)
துறைநீலாவணை தெற்கு 1ஆம் வட்டாரத்தில் அமைந்திருக்கின்ற அண்ணா சனசமூக நிலையம் நாளுக்கு நாள் தூர்ந்து பாழடைந்து வருகிறது.
இதில் சமூகம் வெறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு களம் அமைய வாய்ப்புள்ளது.
1986 களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கத்தின் நிதிஉதவியோடு கட்டியெழுப்பப்பட்ட இக் கட்டடம் அன்று சில பத்திரிகைகளோடு வாசிகசாலையாக திறம்பட இயங்கி வந்தது .
களுதாவளை மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழ் இச் சனசமூக நிலையம் உள்ளது.
இடை நடுவில் நாட்டுச் சூழல் காரணமாக வன்முறை காலகட்டத்தில் கட்டிடம் பாதுகாப்பு காவலரண் போன்று செயற்பட்டும் வந்தது .
அதன் காரணமாக அது பாழடைய ஆரம்பித்தது.
இன்று மோசமான நிலையிலேயே கூரையும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
கதவுகள் ஜன்னல்கள் அகற்றப்பட்ட நிலையில் பாழடைந்து வருகிறது. ஆடு மாடுகள் உறையும் இடமாக மாறியுள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இக் கட்டடத்தை புனரமைக்க சுமார் 40 லட்சம் ரூபாய் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பூ.நவரெத்தினராசா( ஓய்வு நிலை அதிபர்) தெரிவித்தார்.
எனவே இந்த கட்டிடத்தை புனரமைத்து இந்த பகுதி வாழ் மக்களுக்கு உரிய சேவையை வழங்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அமைப்பாளர்கள் இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தலைவர் பூ. நவரெத்தினராசா வேண்டுகோள் விடுக்கிறார் .
No comments