Vettri

Breaking News

மத்திய முகாம் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்






(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகல வைத்தியசாலைகளினதும் அபிவிருத்திக் குழுக்களை சந்தித்து வருகின்றார்.

அந்தவகையில் மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக அவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் கல்முனை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பிராந்தியப் பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்ட தேவைகளில் சிலவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன் அவ்வைத்தியசாலையில் அவசரத் தேவையாக காணப்பட்ட சக்கர நாற்காலியினையும் வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் பிராந்திய பணிப்பாளர் இந்நிகழ்வின் போது கையளித்ததுடன் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவிற்கான தற்காலிக அனுமதியும் வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் அபிவிருத்திக் குழுக்களுடன் கலந்துரையாடி வரும் பணிப்பாளரின் நடவடிக்கைகளை பாராட்டிய குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், அவ்வைத்தியசாலையின் அவசர தேவையாகக் காணப்பட்ட சக்கர நாற்காலி பிரச்சினையை தீர்த்தமைக்காக பணிப்பாளருக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.





No comments