Vettri

Breaking News

25 வருடங்களாக தீர்வின்றி காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுனர்!!




 திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுர கிராம மக்களுக்கு, இந்து மயானத்துக்கான காணியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் (12) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பத்தினிபுர கிராமத்தில் வைத்து, உரிய ஆவணத்துடன் மக்களிடத்தில் இந்த காணி கையளிக்கப்பட்டது. சுமார் 25 வருடங்களாக இந்து மயானம் இன்றி வாழ்ந்த இப் பிரதேச மக்களுக்கு, தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான, கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள காணியே இந்து மயானத்துக்காக இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீண்டகாலமாக நிலவிய இந்து மயான பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு பெற்று கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு அப் பிரதேச மக்கள் தமது நன்றியினையும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் கிராம மக்கள், தங்கள் வயல் நில குடியிருப்பு பகுதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையினர் கையகப்படுத்த முயற்சிப்பதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் ஆளுநர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments