காலதாமதமடைந்துள்ள சியம்பலாண்டுவ 100 மெகாவோட் சூரிய சக்தி பூங்காவின் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் வழங்கப்பட்டது. நிலைபெறுதகு வலுசக்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வலுசக்தி மற்றும் போக்குவரத்துப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாளக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் (09) கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
சியம்பலாண்டுவ சூரிய சக்தித் திட்டத்திற்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாவதாக நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும் இந்த மின்நிலையத்தை அமைக்கும் பணிகள் காலதாமதம் அடைவதால் நாளொன்றுக்கு 19 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த சூரிய சக்திப் பூங்காவிற்கு நுழைவதற்கான பாதை, திட்டத்தின் பணிகளை முன்னெடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் காலதாமதம் அடைவதாக அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த நுழைவுப் பாதை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெறுவதாகவும், வழக்கு முடிவடையும்வரை குறித்த பாதையைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், குறித்த பாதையைப் பயன்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள போதும், கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் வடிகான் வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, வடிகானை சீரமைத்து பொலிஸாரின் ஒத்துழப்புடன் வாகனங்கள் செல்லும் வகையில் குறித்த பாதையை சீர்செய்யுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன் நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு இந்தப் பாதைய பொதுப் பாதையாக வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படிடுத்தி விரைவில் அதனைக் கையகப்படுத்தத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்நாட்டில் முதல் தடவையாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் சியம்பலாண்டுவ சூரிய சக்தித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவடையச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின் திட்டங்களுக்காக சுவீகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணியை விசேட அனுமதிப் பத்திரங்களின் ஊடாக நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபைக்கு விரைவில் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதன்படி, காணி விடுவிப்பு பிரச்சினைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருக்கு குழு ஆலோசனை வழங்கியது. மேலும், நில அளவைப் பணியை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குமாரசிறி ரத்நாயக்க மற்றும் கௌரவ யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments