Vettri

Breaking News

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவம்!!





செ.துஜியந்தன்

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா நாளை ஜூலை 3 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப.9 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

ஆலய பிரதமகுரு சிவசிறி வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் ஆலய உதவிக் குரு சிவசிறி பு.கு.சடாச்சர சர்மா, பாகசாலை ஐயர் சிவசிறி அ.புவிகரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாக் காலங்களில் கூட்டுப் பிரார்த்தனை, மேள வாத்தியக் கச்சேரி, சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள், ஸ்நபனாபிஷேகம் என்பன இடம்பெற்று இரவு 9.30 மணிக்கு வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதல் சிறப்பாக நடைபெறும்.

11 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத் திருவிழாவன்று நள்ளிரவு 12 மணிக்கு பஜனாவழி இசை மன்றத்தின் அனுசரணையுடன் மாம்பழத் திருவிழா இடம்பெறும். 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை திருப்பொற்சுண்ணமும் முற்பகல் 9 மணிக்கு தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து திருப்பொன்னூஞ்சலும் இடம்பெறும். 16 ஆம் திகதி மாலை வைரவர் பூசை இடம்பெறும் விழாக் காலங்களில் தினமும் பொதுமக்களின் ஆதரவுடன் இந்து இளைஞர் மன்றத்தினரின் அன்னதானம் வழங்கப்படும்.  ஆலய உற்சவ காலத்தில் பொதுமக்களின் வசதி கருதி போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments