Vettri

Breaking News

பல்லாயிரம் அடியார்கள் கூடும் உகந்தை ஆலய கிணறுகளில் வாளி இல்லை! ஆலய வளாகத்தில் குப்பைகள் குவிப்பு !!பக்தர்கள் விசனம் ; நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?







( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய ஆடிவேல்  விழா உற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது.

இந்நிலையில் தினமும் கதிர்காமம்  பாதயாத்திரைக்கும் திருவிழாவுக்குமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் உகந்தைமலை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள ஏழு கிணறுகளில் வாளிகள் இல்லாமல் காட்சி அளிக்கின்றது.
 இதனால் அங்கு செல்கின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடிநீரைப் பெறுவதற்கும் நீராடுவதற்கும்
பலத்த சிரமங்களை  எதிர் நோக்குகின்றனர்.

 அதைவிட அங்கு தினமும் பெறப்படும் குப்பை கூழங்கள் ஆலய வளாகத்தின் தென் புறத்திலே கொட்டப்பட்டு வருகின்றன .

அதனால் அங்கு சூழல் மாசடைந்து பாதிப்படையவும் தொற்றுநோய்க்கான காரணிகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
 இதனை நிவர்த்தி செய்ய ஆலய நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு செல்கின்ற அடியார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருவிழாக்கள் நிறைவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. அதாவது எதிர்வரும் 22 ஆம் தேதி தீர்த்த உற்சவம் இடம் பெற இருக்கின்றது .

எனவே இந்த ஆலயங்களிலுள்ள கிணறுகளுக்கு வாளிகளைப் பொருத்தி அடியார்களுக்கு போதுமான வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று இந்த குப்பை கூழங்கள் பக்தர்கள் கூடுகின்ற ஆலய வளாகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றார்கள்.
தேசத்து ஆலயமாக விளங்கும் இவ் ஆலய உற்சவத்திற்கான முன்னோடிக் கூட்டம் அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் நடைபெற்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதிலும் இவ்வாறான குறைபாடுகள் நிலவுவது அடியார்களின் நலன்புரி செயற்பாடுகளை  வழங்குவதை கேள்விக் குறியாக்கியுள்ளது.

எனவே இந்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments