Vettri

Breaking News

உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்!!




 உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென்றும் தேர்தலுக்கு அரசாங்கம் எந்தவகையிலும் தடை ஏற்படுத்தாதெனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாதென்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27 / 2 ல் எதிர்க்கட்சி உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துரலிய ரத்தன தேரர் தமது கேள்வியின்போது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளதாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் எந்தவகையிலும் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை.

ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும்.இந்த மாதம் 17ஆம் திகதியுடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அது தொடர்பான அதிகாரம் கிடைத்துள்ளது. அதனை நிறுத்த எவராலும் முடியாது.

தேர்தலுக்கு அவசியமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்த வாரத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

No comments