Vettri

Breaking News

ஹிருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை!!




 2015 இல் இளைஞர் ஒருவரின் கடத்தலுடன் தொடர்புடைய சம்பவத்தில் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த பிணை கோரிக்கை இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ள்பபட்ட போது நீதவான் இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ரூ. 50,000 ரொக்கம் மற்றும் ரூ. 500,000 கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உதரவிட்டார்.

பிணை உத்தரவுகளை அறிவித்த நீதிபதி, ஹிருணிகாவிற்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ ஆஜராகியிருந்தார்.

சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜராகியிருந்தார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணைக் கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மாஅதிபர் கடந்த அமர்வில் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெமட்டகொடை பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் அவருக்கு 3 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments