மொட்டுக்கட்சி எட்டாக வெடிப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைப் பொதுச்செயலாளர் அசோகா.
அம்பாறையில் ஆயிரம் மாற்றுக் கட்சிஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு
( வி.ரி.சகாதேவராஜா)
இன்று பாராளுமன்றத்தில் மொட்டு கட்சியானது எட்டு பிரிவுகளாக உடைந்து சின்னாபின்னம் ஆகிவிட்டது எனவே அந்தக் கட்சிக்கு ஒருபோதும் தலை தூக்க முடியாது அதை பிரதிநிதித்துவம் படுத்தக்கூடிய அங்கத்தவர்களாகிய நீங்கள் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து இருப்பது எங்களுக்கு ஒரு பெரிய பலம் சேர்த்துள்ளது.
இவ்வாறு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் துணைப் பொதுச்செயலாளரும், குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அசோகா அபேசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் ஆயிரம் மாற்றுக் கட்சிஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
மாற்றத்திற்கான ஆரம்பம், சவால்களை எதிர்கொள்ள தயார் எனும் தொனிப் பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் அம்பாறை நகர சபை கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி அளவில் மொட்டு கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், ஏனைய கட்சியினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் பகிரங்கமாக இணைக்கும் செயற்பாடானது நடைபெற்றது .
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட ஐக்கிய இளைஞர் சக்தியின் செயலாளரும், ஐக்கிய கல்வி அபிவிருத்தி குழுவில் இணைப்புச் செயலாளருமான வெள்ளையன் வினோகாந்த் தலைமையில், தமன பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் திரு. வெணூர பிரகித், மற்றும் உகன பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. ரவீந்திரகுமார ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் துணைப் பொதுச்செயலாளரும், குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அசோகா அபேசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர் ஆகிய சந்திரதாச கலப்பத்தி ஆகியோர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
அங்கு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் துணை பொதுச்செயலாளர் ஆகிய அசோகா அபே சிங்க கூறுகையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி வாகை சூடுவதற்கான சகல வழிமுறைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தெரிந்ததே.
அம்பாறை மாவட்டத்தின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதே சந்தர்ப்பத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து எமது கட்சியுடன் இணையக்கூடிய ஒவ்வொருவருடைய எதிர்கால பொறுப்புகளையும் இக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் நிச்சயமாக ஏற்பேன் என்பதனையும் இன்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இணைய உள்ளனர் உங்கள் மாவட்டத்தை சேர்ந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிய வைத்தியர் திரு. திலக் ராஜபக்ஷ அவர்களும் எம்முடன் இணைந்து பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்க அம்சம் என்பதனையும் தெரிவித்திருந்தார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியையும் சஜித் பிரேமதாஸ அவர்களையும் வெற்றி வாகை சூட வைப்பதற்கான வேலைத்திட்டங்களில் தீவிரமாக இறங்கும்படி அனைவரையும் அன்பாக வினயமாக கேட்டார்.
நிகழ்வானது மாற்றத்திற்கான ஆரம்பம் எனும் தலைப்பிற்கு ஏற்ப மொட்டு கட்சியின் அதுபோல
ஏனைய கட்சிகளில் முன்னாள் மாநகர சபை, பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றின் முன்னாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உட்பட மாற்றுக் கட்சிகளின் அடிப்படை அங்கத்தவர்கள் கிட்டத்தட்ட 700 முதல் 1000 பேர் வரையிலானோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிரந்தர அங்கத்தவர்களாக சத்திய பிரமாணம் செய்து இணைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வானது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான மாற்றுக் கட்சி அங்கத்தவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் ஊடகங்களுக்கு முன்பாக பிரபலமாகவும், வெளிப்படையாகவும் இணைந்து கொண்டமை இதுவே முதல் தடவையாகும். அப்படி இணைந்து கொண்டவர்கள் தாங்கள் நிச்சயம் சஜித் பிரேமதாச அவர்களை எதிர்கால ஜனாதிபதி ஆக்குவதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபட்டு அவர்களை கட்டாயம் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைப்பது உறுதி என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளனர்.
திரு. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் இந்நாட்டின் வாழக்கூடிய ஏழைகளுக்கான நல்லாட்சி, மற்றும் சமகாலத்தில் காணப்படக்கூடிய நடைமுறை சிக்கல்கள், நாட்டில் காணப்படக்கூடிய பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வுகள், கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில் புரட்சி, சுயதொழில் முயற்சியால்களை ஊக்குவித்தல், நவீன விவசாய முறைகள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், பொருட்களின் விலை குறைப்பு, இன்னும் அதிக அபிவிருத்திகள் நாட்டில் உருவாகும் இதற்கு நிச்சயம் சஜித் பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற கருத்தினையும் பொத்துவில் தொகுதியின் அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த திரு. சந்திரதாச கலப்பத்தி அவர்கள் கூறுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி அடைவதை இங்கே கூடி இருக்கும் மக்கள் உறுதி செய்கிறார்கள் என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் வாழக்கூடிய அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளும்படியாகவும் அனைவரையும் அன்பாக வரவேற்று அழைத்திருந்தார் அதே சந்தர்ப்பத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து வருகை தந்திருந்த தவிசாளர்கள் உப தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றக்கூடிய தலைவர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வும் திரு. அசோகா அபே சிங்க அவர்களும், திரு. சந்திரதாச களப்பத்தி அவர்களும் திரு. வெள்ளையன் வினோகாந்த் அவர்களும் மாலை அணிவித்து அவர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கான ஆசனங்களில் அமர வைத்து அவர்களுடைய பிரவேசமானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதனை சபையார் அனைவரும் தெரிந்து கொள்ளு முகமாக வெளிப்படுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்க நிகழ்வின் விசேட அம்சமாகும். எனவே திகாமடுள்ள மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியானது 100 வீதம் உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உருமாறியுள்ளது என்ற உணர்வானது இந்த நிகழ்வின் போது கலந்து கொண்ட அனைவரது மனதிலும் ஆணிவேராக பதிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நன்றி.
No comments