தொடரும் பணிப்புறக்கணிப்பு!!
25,000 ரூபா கொடுப்பனவை கோரி சுமார் 200 அரச சேவை தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்படுள்ளது.
நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்றும் (08) இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச நிறுவனங்களின் ஊழியர்கள் நேற்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காததால், அரச நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
தமது கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், இன்றும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்புடன், தபால் தொழிற்சங்கங்களும் நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நள்ளிரவு வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த தபால் சேவை சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதனிடையே, அரச ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஆசிரியர்- அதிபர் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அரச ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
No comments