ஆடி அமாவாசை விரதத்தின் பூரண விளக்கம்; யார் யாரெல்லாம் அனுஸ்டிக்க வேண்டும்?
ஆடி அமாவாசை விரதம் யார் யாரெல்லாம் அனுஷ்ட்டிக்க வேண்டும்? எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும்? யார் அனுஷ்டிக்க கூடாது? என்பதையெல்லாம் இந்துக்கள் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக ஆடி அமாவாசை என்றாலே
தந்தையை இழந்தவர்கள் உபவாசம் இருந்து பிதிர்க்கடன் செலுத்தி தீர்த்தமாடலுக்கான தினம் என்பது தெரியும்.
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை மகோற்சவம் இதற்கு உகந்தது என்பர். அங்கு அந்த நாளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் ஒன்றுகூடி பிதிர்க்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.
இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை விரதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ம் தேதி. (04.08.2024) ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கபடவிருக்கிறது..
. இந்த நாளில் யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.
பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடும் விதமாக விரதம் இருப்பது வழக்கம். யார் யார் அமாவாசை விரதம் இருக்கலாம், தை அமாவாசை தினத்தில் ஆண், பெண் ஆகியோரின் விரதம் முறை பற்றி பார்ப்போம்.
பெண்கள் விரதம் இருக்கும் முறை:
* திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அமாவாசை விரத முறை தை அமாவாசைக்கு மட்டுமல்ல, மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில் இருக்க வேண்டிய விரத முறைக்கும் பொருந்தும். ஆடி அமாவாசை மகாளய அமாவாசை, தை அமாவாசை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும், கடைப்பிடிக்கப்படும் அமாவாசையாக உள்ளது.
* பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள்.
* அப்பா இல்லை என்றால் அம்மா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
* அம்மா இல்லை என்றால் அப்பா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
அப்படி சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு இலையில் சோறு போட்டு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது.
ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ
1. ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
2. அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
3. கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
4.அமாவாசை தினத்தில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
5. இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்
அமாவாசை அன்று பெண்கள் நன்றாக சாப்பிட்ட பின்னர் விரதத்திற்கான உணவை சமைக்க வேண்டும். கணவர் தான் விரதம் இருக்க வேண்டும். பெண்கள் விரதம் இருக்கக் கூடாது.
ஒரு கைப்பிடி அளவேனும் அன்னத்தை பெண்கள் இரவு உணவில் சேர்ப்பது பூரண ஆசி கிட்டும்.
அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துவது அவசியம். தாய், தந்தையர்களை யார்வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளும் நல் பலன்கள் கிடைக்கும்
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு.
மறைந்துவிட்ட தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
புண்ணிய தலம் - தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழலில் வீட்டிலேயே முன்னோரை ஆராதிக்கலாம். படையல் இட்டு அவர்களை வழிபட்டு முன்னோரின் ஆசியைப் பெறலாம். பசுக்களுக்கு அகத்திக் கீரை உண்ணக் கொடுப்பது மிகவும் சிறப்பு
ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகியவற்றின் மகிமையை விளக்கும் வகையில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அழகாபுரி என்ற தேசத்தின் அரசர் அழகேசன். அவருக்குப் பிறகு தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லை. அதற்காக புத்திரபாக்கியம் வேண்டி மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அதன் பயனாக அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசர் இருந்தபோது, 'உன் மகன் இளமைப் பருவத்தை அடையும்போது மரணம் அடைவான்' என்பதாக ஓர் அசரீரி ஒலித்தது. மேலும் இறந்த பிறகு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால், வரப்போகும் மனைவியின் மாங்கல்ய பலத்தினால் மறுபடியும் அவன் உயிர் பெறுவான் என்றும் அந்த அசரீரி கூறியது.
அசரீரி கூறியதுபோலவே அரசரின் மகனும் இளமைப் பருவம் அடைந்தபோது இறந்து போனான். அரசர் இறந்துபோன தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடியபோது, பெற்றோர் இல்லாமல் உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி விரக்தியுடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அன்று இரவு அந்தப் பெண்ணையும், அரசரின் இறந்துபோன மகனையும் காட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தனர்.
அந்தப் பெண் தன் கணவன் உறங்குகிறான் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும்தான் தான் திருமணம் செய்துகொண்டவன் இறந்துவிட்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அழுது புரண்டு கதறினாள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாம் அழைத்துக் கதறி அழுதாள். பேதைப் பெண்ணின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கிய அம்பிகை, இறந்துபோன அவளுடைய கணவனை உயிர் பெறச் செய்தாள்.
தனக்கு அருள் புரிந்த தேவியிடம் அந்தப் பெண், ''தாயே ஈஸ்வரி, இருண்டு போன என் வாழ்க்கையை மறுபடியும் பிரகாசிக்கச் செய்தது போலவே, இந்த நாளில் உன்னை வழிபடும் பெண்களுக்கும் அருள் புரியவேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.
இந்த நிகழ்ச்சி நடந்தது ஆடி அமாவாசைக்கு முந்தின நாள் ஆகும்.
மற்றவர்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்ட அந்தப் பெண்ணின் உயர்ந்த குணத்தைப் போற்றும் வகையில், ''மகளே, நீ வேண்டிக் கொண்டபடியே இந்த நாளில் உனக்கு நான் அருள்புரிந்த கதையைப் படித்துவிட்டு, மறுநாள் ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சுமங்கலிப்பெண்களுக்குத் தந்து என்னை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பதுடன், அவர்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்'' என்று வரம் தந்து அருளினாள். அந்த வகையில் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், அம்பிகையை வழிபடுவதற்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது.
மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். மாதம்தோறும் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடிஅமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். எனவே, அன்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.
முன்னோர்
ஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும். மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
No comments