சிறுமியை கொடூரமாக தாக்கியவர்கள் கைது
அரநாயக்க, எஹலகஸ்தென்ன பகுதியிலுள்ள 6 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படும் தாய் உட்பட 4 பெண்கள் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்க எஹலகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமியின் தாய் (41), 78 மற்றும் 71 வயதுடைய இரண்டு உறவினர்கள் மற்றும் மற்றுமொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியின்படி, அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ராகுல கந்தேவத்த மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதானி எஸ்.எம்.டி.டபிள்யூ.செவ்வந்தி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேக நபர்களை கைதுசெய்தனர்.
வீடியோவில், குழந்தையின் பாட்டியின் இரண்டு சகோதரிகள் 6 வயது குழந்தையை வீட்டின் முற்றத்தில் கொடூரமாக அடித்து, குழந்தையை இரண்டு கைகளாலும் வீட்டிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் 12ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலுக்கு உள்ளான குழந்தை மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குழந்தை பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments