வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் சலுகை விலையில் கொழும்புக்கு!!!
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் கொழும்பில் தரமான பழங்களை மலிவு விலையில் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள நுகர்வோர் பழ வகைகளுக்காக அதிக விலையை செலுத்த வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை போதிய போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதியின்மையாகும். இதற்காக அதிகம் செலவிடவுள்ளது என்று குறிப்பிட்ட அவர், போக்குவரத்து அமைச்சுடன் இது குறித்து கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.
இதற்காக விசேட நிதி ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்லஸ் இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு புகையிரத நிலையங்களிலும் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டு வடக்கின் பழங்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்
No comments