அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும்!!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது எனவும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முக்கியமான தேர்தலாக அமையும். தற்போது பழைய அரசியல் கட்சிகள் சம்பிரதாய முறையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நம் நாட்டின் வரலாற்றில், பல கிளர்ச்சிகளும் உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன. கடந்த ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போராட்டமும் நடந்தது. எனவே, மீண்டும் அதேபோன்று மூன்றாவது உள்நாட்டு யுத்தம் போன்ற நிலைமை உருவாகும் வகையில் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்களா? அல்லது, அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு செப்டம்பர் 21ஆம் திகதி தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி இலங்கை மக்கள் முன்னிலையில் உள்ளது என்றார்
No comments