ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி - ஜனாதிபதி!!
நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
நாட்டில் ஏற்றுமதி சார்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பை இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் இணைந்து செயற்படுத்தும் “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (26) ரம்புக்கன பராக்கிரம மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக, தொழில்நுட்ப அமைச்சு “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030”,திட்டத்தை ஆரம்பித்துள்ளது. உட்கட்டமைப்பு, இணைப்புகள்,பிரவேசம், திறன்கள், கல்வியறிவு,கைத்தொழில் மற்றும் தொழில், இணைய பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, டிஜிட்டல் நிதி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட அடிப்படை தூண்களின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கலை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆரம்ப கட்டம் கேகாலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, கேகாலை மாவட்டத்தில் உள்ள 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.
ரம்புக்கன பராக்கிரம வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதுடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்காக பின்னவல மிருகக்காட்சிசாலை வளாகத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்
No comments