Vettri

Breaking News

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்!!




 இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.


கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நமது இளைஞர்கள் வேலை தேடி அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த நாடுகளில் உள்ள நிலையை ஏன் இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்று கேட்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நாட்டை முன்னேற்றி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் இந்தக் கல்வியால் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அப்படியானால், நாம் எப்போதும் வறிய நாடாகவே இருக்க வேண்டியிருக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அந்த பொருளாதாரப் பரிமாற்றத்திற்கு தேவையான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்றுமதி பொருளாதாரம் வலுப்பெற்று உலக சந்தையை வெல்ல வேண்டும். தேரவாத பௌத்தம் இருக்கும் முக்கிய நாடுகளாக இலங்கை, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மியான்மார் பழைய முறைக்குள் சிக்கியிருக்கிறது. ஆனால் புதிய முறையின்படி முன்னேறிச் செல்வதால், தாய்லாந்து விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே தேரவாத பௌத்தத்தை பாதுகாத்த நாமே எமது நாடு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். தாய்லாந்தைப் போன்று பௌத்த சூழலில் உலகச் சந்தையை நாம் வெல்ல வேண்டும். நாம் அனைவரும் எதிர்காலத்தைப் பார்த்து பணியாற்ற வேண்டும். புதிய பொருளாதாரம் உருவாக்கப்படும் போது தொழில் பிரச்சினை தீர்ந்து இலங்கையில் தங்கக்கூடிய சூழல் உருவாகும் என்றார்

No comments