800,000மெற்றிக் தொன் அரிசி அறுவடை;விளைச்சலை இரட்டிப்பாக்க நடவடிக்கை!!
தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார்.
'இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பால் சென்று வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது விவசாய அமைச்சின் பொறுப்பாகும். தற்போது இதனை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறோம். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் ஆறு போகங்களில் நெற்பயிர் அறுவடையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் உட்பட அனைத்து நெல் வயல்களும் நெற் பயிற்செய்கைக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
பயிரிடப்பட்ட நிலத்தை ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது நெற்செய்கையின் வெற்றிகரமான பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளதுடன் 800,000 மெற்றிக் தொன் அரிசி அறுவடை கிடைத்துள்ளது என்றார்
No comments