Vettri

Breaking News

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 300பில்லியன் தேவை!!




 அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிப்பதாயின் வருடாந்தம் 300 பில்லியன் ரூபாவை மேலதிகமாக ஒதுக்க நேருமென, நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பணம் அச்சிடாமல் சம்பளத்தை அதிகரிப்பதானால் வற் வரியை 22 சதவீதத்தாலும் நிறுவன வரியை 42 சதவீதத்தாலும் அதிகரிக்க நேரும் என சபையில் தெரிவித்த அவர், இதற்கு நாட்டு மக்கள் இணக்கம் தெரிவிப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், சம்பள அதிகரிப்புக் கோரி அரசாங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டங்களின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினருமே உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்;

பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் இன்னும் மீட்சி பெறவில்லை என குறிப்பிடுவோரின் உளவியலை ஆராய வேண்டியுள்ளது.

தேசிய கடன் மறு சீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் இதர நிதியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்தில் தெரிவித்திருந்தோம். அந்த வகையில் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்றதன் பின்னர், ஊழியர் சேமலாப நிதியத்துக்கான வட்டி வழங்கலை 12 அல்லது 13 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது.எனவே, பொருளாதார விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கின.ஆனால் துரதிஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மாத்திரமே அவர்கள் முன்வைத்தனர்.

குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்றுள்ளது என சர்வதேசம் குறிப்பிட்டுள்ளது. நிலைபேறான தன்மையில்,நாட்டின் நிதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டுடனான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இருதரப்பு மற்றும் வணிகக் கடன் வழங்குநர்களுடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதும் சகல ஆவணங்களும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

No comments