ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 10பில்லியன் ரூபா!!
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும், அச்சிடுவதற்கான செலவுகள் 200 கோடி ரூபாவாகும் எனவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அச்சிடுவதற்கான செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிப்பதும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 24, 2023க்குப் பிறகு எந்தத் தேர்தலும் நடத்தப்படாததால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இச்சட்டம் முதன்முறையாக அமுல்படுத்தப்படும். ஒரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகைக்கு இந்த சட்டம் வரம்பு நிர்ணயித்துள்ளது.
வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய தொகை நிர்ணயம் செய்யப்படும், மேலும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.
வரம்பை மீறிய அல்லது சட்டவிரோதமான செலவுகள் தொடர்பில் எவரும் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சட்டமா அதிபர் ஊடாக சட்டத்தை ஆராய்ந்து அமுல்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்தும் வேட்பாளர்களை முடிந்தவரை கண்காணிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments