Vettri

Breaking News

Smart Phone கைக்குள் இன்றைய மாணவ சமூகம் எனும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் கருத்து!!




 


Smart Phone கைக்குள் இன்றைய மாணவ சமூகம்


அன்று மனிதன், மனிதனோடு தொடர்பினை மேற்கொள்ளவும் மனித தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்ய மனிதனால் மனித கைக்குள் அடங்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே கையடக்க தொலைபேசிகள் ஆகும். ஆனால் இவை இன்று அபரிவிதமான  தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக திறன் பேசிகள் (Smart Phone) என்ற பெயரோடு இன்றைய சமூகத்தை அதன் கைக்குள் அடக்கி வைத்துள்ளன.

“கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்து கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்”  என பல வருடங்களுக்கு முன்னர் வெளியான சிவாஜி படப்பாடலில்  அழகாக வரிகள் அமைத்திருக்கிறார் நா. முத்துக்குமார்.  முன்னைய சமூகத்தினர்  ஏனையவருடன் பேசுவதற்காக மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்தினர். ஆனால் இன்று குழந்தைக்கு சோறூட்டுவது முதல் பணத்தை வங்கியில் வைப்பு செய்வது வரை  அனைத்தையும் செய்து விடுகின்றன இந்த திறன் பேசிகள். 

இலங்கையில் பொதுவாக கோவிட்-19 பரவலை தொடர்ந்தே இணையவழி கற்கை ஆரம்பமானது.  இதனை அடிப்படையாக வைத்து அனைத்து மாணவர்கள் மத்தியிலும் திறன்பேசிகளின் பாவனை புழக்கமுறத் தொடங்கி விட்டன. ஆனால் இணையவழி கற்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் திறன்பேசிகளின் பாவனையை குறைத்துக் கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். 

2011 ஆம் ஆண்டில்  உலக சுகாதாரத் திணைக்களம்  மேற்கொண்ட ஆய்வின்படி 5 பில்லியனுக்கு  மேற்பட்ட மக்கள்  கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றார்கள். நாளொன்றுக்கு  இரண்டு மணித்தியாலயங்கள் மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய சமூகத்தினர் 5 மணித்தியாலயங்களுக்கு மேல்  பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவில் குழந்தைகள் நாளொன்றுக்கு  60 நிமிடங்கள் மட்டுமே  தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டும் என 2021 ல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் நம் நாட்டில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நம்மில் எத்தனையோ பேர் இருப்பத்து நான்கு மணித்தியாலயங்களும் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றோம்.

இலங்கையில் 2024ம் ஆண்டு ஆய்வு முடிவில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60% சதவீதம் பேர் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்மாகாணத்தில் உள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்திய குழுவொன்று  ஆய்வொன்றை மேற்கொண்டதாக விசேட வைத்திய நிபுணர் அமில சந்திர ஸ்ரீ கூறியுள்ளார். இதில் பல சிறுவர்கள் இரவில் தூக்கமின்றி கவலையுடன் இருப்பதாகவும், இவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுப்பதில்லை என்பதும் ஆய்வில் வெளிவந்துள்ளது. மேலும் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி உள்ள சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதும்  கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது உடல் சரியாக செயல்படாததால் நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அதனை பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியாத உள்ளதாகவும்  ஆய்வு முடிவு கூறுகின்றது. அவசியமாக இருந்தால் மட்டும் பிள்ளைகளுக்கு ஒரு மணித்தியாலயத்துக்கு குறைந்த அளவு  கையடக்க தொலைபேசிகளை வழங்கும் படி வைத்திய குழு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக காணப்படுகின்றது.

திறன்பேசிகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”  என்பது போல இன்று அளவுக்கு மீறி திறன்பேசிகள் எனும் போதையில் அடிமையாகி விட்டார்கள். இன்றைய சமூகத்தினருக்கு உணவின்றியும் ஒரு நாள் இருந்து விடலாம் இன்டர்நெட் கார்ட் (Internet Card)  இல்லாமல் வாழ முடியாதுள்ளது.

தேவையற்ற செயலிகளின் பதிவிறக்கம்,  காணொளிகள் பதிவிறக்கம், இணையவழி விளையாட்டுக்கள், போதைப் பொருள் பாவனை, தகாத உறவுகள், மன அழுத்தங்கள், உடல் நோய்கள்  இதனால் குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள், சமூக சீரழிவுகள் என பல்வேறு சவால்களை ஏற்படுத்தி விடுகின்றன இந்த திறன் பேசிகள்.   எவ்வளவுதான்  பத்திரிக்கைகள், ஊடகங்களினூடாக கைபேசியின்  பாவனையை குறையுங்கள்  என பற்பல செய்திகள் பரப்பப்பட்டாலும் அவை இன்று  அதிகரித்துக் கொண்டு செல்கின்ற வண்ணமே உள்ளன.

 நமது முன்னைய தலைமுறையினர்   நடக்க, பேச, பழக, சமைக்க, வாழ என பல்வேறு விடயங்களை சமூகத்திடமிருந்து  கற்றுக்கொண்டார்கள். ஆனால் நம் தலைமுறையினர் இவை அனைத்தையும்  திறன்பேசிகளிடமிருந்து கற்றுக் கொள்வதுடன் அவர்களுக்கும் சமூகத்திற்கும் தேவையற்ற விடயங்களையும் கற்றுக் கொண்டு சமூகத்திலிருந்து தனிமையாகி விடுகின்றார்கள் .  எந்தளவிற்கு நாம் கைபேசிகளுடன் நேரத்தை செலவிடுகின்றோமோ? அந்தளவுக்கு நாம் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிரிந்து செல்கின்றோம்.

சூழலோடும் சமூகத்தோடும் ஒன்றித்து வாழ்ந்தால் தான் சூழலில் இருந்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளக் கூடியவனாக மனிதன் மாற முடியும். அன்று “பெற்றோர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என பிள்ளைகளிடம் கூறிய காலம் மாறி  இன்று வெளியில் சென்று விளையாடு என கூறுமளவுக்கு இன்றைய சமூகத்தினர் திறன்பேசிகளுடன் ஒன்றித்து வாழ்கின்றார்கள் என்றே கூற வேண்டும். மனிதன் மனிதனோடு எங்கிருந்தாலும் தொடர்பினை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட  இவ் கைபேசிகள் மனித முகங்களை பார்த்து பேச முடியாத அளவிற்கு மாற்றி விட்டன.

எது எவ்வாறாக இருந்தாலும்  “கத்தி கொண்டு  கனியையும் நறுக்கலாம், பிறர் உயிரையும் பறிக்கலாம்” என்பதுபோல  எந்த ஒரு விடயமாக இருந்தாலும் நன்மையும் காணப்படும் அதேபோல தீமைகளும் காணப்படும். அதுபோலவே திறன்பேசிகளை  நம் திறன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்துவோமாக இருந்தால்  நாமும் சமூகத்தை சீர்படுத்தி சிறந்த பிரஜையாக பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ முடியும்.


தேவலிங்கம்  நிலக் ஷனா 

நான்காம் வருட கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி 

கல்வி, பிள்ளை நலத்துறை,

கிழக்குப்பல்கலைக்கழகம்.

இலங்கை.

No comments