உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!!
ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளோம் எனவும் இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். முதலில், இந்த உதவித்தொகை பெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த புலமைப்பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 04 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
கடந்த 3 வருடங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலமாக அமைந்தது. நாங்கள் அனைவரும் அவதிப்பட்டோம். உணவு இருக்கவில்லை. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இருக்கவில்லை. இப்போது அந்த நிலைமை இல்லை. ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டின் பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தீர்மானித்தேன். அதன்படி இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மீட்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க தேவையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அதன் மூலம் அடுத்த 5-10 ஆண்டுகளில் பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றார்.
No comments