Vettri

Breaking News

ஆசியாவின் பிரமாண்ட புத்தகங்களை திரட்டும் புத்தகத் திருவிழா!!




ஆசியாவின் பிரமாண்டங்களுள் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான புத்தகங்கள் சேகரிக்கும் பணிகள் மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழு ஊடாக மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில்  மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தக திருவிழா அதன் தலைவர் திரு. பவளகாந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.





மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களை பிரதிபலிக்கத் தக்கதும், மட்டக்களப்பிற்கு உரித்தானதுமான மருத்துவ மந்திரங்களை கொண்ட பழமைவாய்ந்த நூல்களையும், அருகிவரும் நூல்களின் தொகுப்புகளையும் கொண்டதுமாக, மண்ணின் பொக்கிஷங்களை நவீன மயப்படுத்தலுடன் கூடிய கல்வி களஞ்சியமாக உருவாகிவரும் பொது நூலகத்திற்கான நூல்களை சேகரிக்கும் பணியின் ஒரு அங்கமாக இப் புத்தக திருவிழா நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தி அதன் பயன்களை விரைவு படுத்தி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையிலான  முனைப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறைந்தது மூன்று லட்சம் புத்தகங்களை கொண்டதாக இந் நூலகமானது  திறந்து வைக்கப்பட வேண்டும் எனும் எமது கருதிட்டத்திற்கு அமைவாக உலகளாவிய ரீதியிலும் நாடளாவிய ரீதியிலும் அரிய புத்தகங்களை சேகரிக்கும் அறப்பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 


இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்ரினா முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன், மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்ஷனா கௌரி, மாநகர சபை ஆணையாளர் எந்திரி திரு.சிவலிங்கம், வவுனியா மாவட்ட போதனா வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் சுகுணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஜதீஸ்குமார், அகில இந்திய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தா, கிறிஸ்தவ மத போதகர் அருமைராஜா, எமது கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன், மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சாம்பசிவம் பரணிதரன் மற்றும் குழு உறுப்பினர்கள், உட்பட எழுத்தாளர்கள், நூலகர்கள், புத்தக நன்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments