ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிர்வாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!!
ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிர்வாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் திராய்மடுவில் 1055 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக கட்டட தொகுதியினை இன்றையதினம் திறந்து வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் போது 20 இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் உறுமய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் காணி உரிமம் அற்ற மக்களில் தகுதி பெற்ற 27,595 பேரில் முதற்கட்டமாக 192 பேருக்கு காணி உறுதி பத்திரங்களும், மேலும் உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கிவந்த மாவட்ட செயலகத்தின் இடவசதி போதாமையினால் புதிய மாவட்ட செயலக கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகள் திராய்மடு பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த போதிலும் நிர்மாண பணிகள் மிக நீண்ட காலமாக முடிவுறுத்தப்படாமல் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக சிவ. சந்திரகாந்தன் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர், பல்வேறு வழிகளிலும் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக, இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொடுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, கட்டட நிர்மாண பணிகள் நடைபெற்று புதிய மாவட்ட செயலகத்தின் பணிகளை முழுமையாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடு உருவாகியிருந்தது.
மேலும் நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இப்புதிய மாவட்ட செயலக தளபாட கொள்வனவுகளுக்காக 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது .
இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்களினால் குறித்த கட்டட தொகுதியானது மக்கள் பாவனைக்கு கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments